UPDATED : அக் 21, 2026 10:37 PM
ADDED : அக் 21, 2026 09:29 PM
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இதே கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் ரசிகா, 14, சேலம் மாவட்டம், கவர்பனை கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகள் பிரியதர்ஷினி, 14, ஆகிய இருவரும் ஒன்றாக 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த, 2 மாணவியரும் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு தங்களுடைய புத்தக பையுடன் வந்துள்ளனர்.
காலை 8.30 மணியளவில் தங்கள் புத்தக பையை பள்ளியின் வகுப்பறைக்குள் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளனர். வெளியே சென்ற மாணவியர், மீண்டும் பள்ளி தொடங்கும் நேரம் ஆகியும் வராததால், ஆசிரியர்கள் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அரும்பாவூர் போலீசாருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியர் குறித்து விசாரணை செய்தனர்.
போலீசார் விசாரணையில், மாணவிகள் இருவரும் பள்ளியில் தங்களது புத்தகப் பையை வைத்துவிட்டு, பள்ளியில் இருந்து வெளியேறி அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறி பெரம்பலுார் சென்றதும், பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்டில் கழிப்றைக்கு சென்று அங்கு தங்களுடைய பள்ளி சீருடையை மாற்றியதும் கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மாணவியர், எங்கு சென்றனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற இரு மாணவியர், புத்தகப்பையை வகுப்பறைக்குள் வைத்துவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
