/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
புதுகையில் குடிநீர் விநியோகத்தில் பிரச்னை : காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
/
புதுகையில் குடிநீர் விநியோகத்தில் பிரச்னை : காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
புதுகையில் குடிநீர் விநியோகத்தில் பிரச்னை : காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
புதுகையில் குடிநீர் விநியோகத்தில் பிரச்னை : காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
ADDED : ஜூலை 26, 2011 12:43 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை டவுன் காந்திநகரில் ஒருவாரமாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தால் புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகரின் மக்கள் தொகை கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ள நிலையில் 1994ம் ஆண்டு துவக்கப்பட்ட காவிரி குடிநீர் திட்டம் 17 ஆண்டுகள் கடந்தும் விரிவுபடுத்தவில்லை. இதன்காரணமாக நகரில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நிலமையை சமாளிக்க தற்போது ஒவ்வொரு பகுதிகளுக்கும் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம் முறைவைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நகரில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணிகளால் பல பகுதிகளில் குடிநீர் பைப்புகள் சேதமடைந்து தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக காந்திநகர் ஏழாவது வீதியில் குடிநீர் பைப்புகள் சேதமடைந்துள்ளதால் கடந்த ஒருவாரமாக குடிநீர் வினியோகம் முடங்கியுள்ளது. பழுதடைந்த பைப்புகளை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தியும் பைப்புகளை சரிசெய்து குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. டேங்கர் லாரிகள் மூலமாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதற்கும் நகராட்சி நிர்வாகம் ஒத்துக் கொள்ளாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பெண்கள் உட்பட 200 பேர் நேற்றுக்காலை காலிக்குடங்களுடன் திரண்டுவந்து உசிலங்குளம் பகுதியில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புதுக்கோட்டைக்கு வந்துகொண்டிருந்த அனைத்து பஸ்களும் ரோட்டோரமாக நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். சம்பவஇடம் சென்ற நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன், உடனடி ஏற்பாடாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும். பாதாள சாக்கடை பணிகளால் சேதமடைந்துள்ள குடிநீர் பைப்புகளை சரிசெய்து இன்று(25ம் தேதி) மாலை ஐந்து மணிக்குள் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்க மறுத்த பெண்கள் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். வேறுவழியின்றி அரைமணி நேரத்தில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இதன்பின்னரே மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்துசென்றனர்.