/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மனித ரத்தத்தில் சோறு பிசைந்து பில்லி சோறு எரியும் திருவிழா
/
மனித ரத்தத்தில் சோறு பிசைந்து பில்லி சோறு எரியும் திருவிழா
மனித ரத்தத்தில் சோறு பிசைந்து பில்லி சோறு எரியும் திருவிழா
மனித ரத்தத்தில் சோறு பிசைந்து பில்லி சோறு எரியும் திருவிழா
ADDED : மார் 15, 2025 02:51 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வாராப்பூர் அருள்மிகு பூர்ணகலாம்பிகை, புஷ்பகலாம்பிகை சமேத, பெரியஅய்யனார், பாலையடிகருப்பண்ணன் மற்றும் பரிகார சுவாமிகளுக்கு மாசி மகத்திருவிழாவை முன்னிட்டு மனித ரத்தத்தில் சோறு பிசைந்து, பில்லி சோறு எரிதல் விழா நடந்தது.
நேற்று மதியம் 1:00 மணிக்கு கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த மூன்று சிறுவர்களுக்கு பழைய வழக்க முறைப்படி இடுப்பில் இருந்த அரணாக்கயரை அறுத்தனர். பின், வழக்கப்படி ஒருவர் தொடையை கீறி அதிலிருந்து வந்த ரத்தத்தை, அங்கு தயாராக இருந்த சோற்றில் ஊற்றி, பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்தனர்.
பின்னர், இந்த பில்லி சோற்றை காட்டு பகுதியில் வீசுவதற்காக 30-க்கும் மேற்பட்ட பூஜாரிகள் ஓடி சென்று, பில்லி சோற்றை காட்டு பகுதியில் மேல் நோக்கி வீசினர். அந்த பில்லி சோறு கீழே விழாது என்பது ஐதிகம்.
இந்த பில்லி சோறு தயாரித்து சுவாமிகளுக்கு படைக்கும் வரை அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த வேஷ்டி கூடாரத்தில் உள்ளே அமர்ந்திருந்தார். இவ்விழாவில் பல்லாயிர கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இங்கு வைரத்தேர் திருவிழா இன்று காலை மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர் கூறியதாவது:
இக்கோவிலில் உள்ள பூர்ணகலாம்பிகை, புஷ்பகலாம்பிகை சமேத, பெரியஅய்யனார், பாலையடிகருப்பண்ண சுவாமிகள் மிக சக்தி வாய்ந்த தெய்வங்களாக விளங்கி வருகின்றன. 200 ஆண்டுகளுக்கு முன், திருவிழாவின் போது, ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தையை பலி கொடுத்து வந்துள்ளனர்.
அப்போது, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. அன்று குழந்தையை பலி கொடுக்கும் இவர்களது முறை வந்தது, அந்த குழந்தையை பலி கொடுக்க விடாமல் அந்த தாய் குழந்தையை மறைத்து வைத்து விட்டார்.
பின்னர், சில மணி நேரத்தில் அந்த குழந்தை தானாகவே பலி கொடுக்கும் இடத்திற்கு வந்து விட்டது. இதை அறிந்த அந்த தாய் மடி பிச்சை கேட்டு இந்த கோவிலில் முன்பு கதி கலங்கி நின்றுள்ளார்.
அந்த நேரத்தில் கடவுள் தோன்றி, அந்த குழந்தையை பலி கொடுக்காமல், அதன் தொடையை கீறி ரத்தம் எடுத்து சோற்றில் பிசைந்து படைக்குமாறு கட்டளையிட்டு மறைந்து விட்டார்.
அன்றிலிருந்து குழந்தைகளை பலி கொடுக்காமல் அந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் ரத்தத்தை பில்லி சோறு படைத்து வந்துள்ளனர். பின்னர், கால போக்கில் குழந்தைக்கு பதிலாக அந்த குடும்பத்தில் உள்ள பெரிய நபரின் இரண்டு பக்க தொடை கீறி ரத்தம் எடுத்து சோற்றில் பிசைந்து காட்டு பகுதியில் அந்த பில்லி சோற்றை எறிந்து நேத்திக்கடன் தற்போது, வரை செய்து வருகின்றனர். அந்த பில்லி சோறு கீழே விழாமல் சுவாமி படையலாக ஏற்றுக்கொள்ளும்.
இவ்வாறு கூறினார்.