/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வேங்கைவயல் குரல் மாதிரி பரிசோதனை வழக்கு ஒத்திவைப்பு
/
வேங்கைவயல் குரல் மாதிரி பரிசோதனை வழக்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் குரல் மாதிரி பரிசோதனை வழக்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் குரல் மாதிரி பரிசோதனை வழக்கு ஒத்திவைப்பு
ADDED : மார் 23, 2024 02:15 AM
புதுக்கோட்டை:வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் குரல் மாதிரி சோதனை மேற்கொள்ள அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 25-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுவரை 31 பேர் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களின் மரபணு ஒத்துப்போகவில்லை. இதையடுத்து 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய அனுமதி கோரி மாவட்ட எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதற்கு 10 பேரும் ஆட்சேபனை தெரிவித்ததால், சோதனைக்கு அனுமதி மறுத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற நாட்களில் அப்பகுதிகளை சேர்ந்தவர்களின் வாட்ஸ் ஆப் உரையாடல்களில் இருந்து குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
ஏற்கெனவே இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேலும் மூன்று பேருக்கு குரல் மாதிரி சோதனைக்கு அனுமதிக்கக்கோரி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் அண்மையில் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது கால அவகாசம் வேண்டும் என வக்கீல் கோரியதையடுத்து விசாரணையை மார்ச் 25க்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

