/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஆமை வேக கால்வாய் சீரமைப்பால் கடைமடைக்கு நீர் வருவது கேள்விக்குறியே!
/
ஆமை வேக கால்வாய் சீரமைப்பால் கடைமடைக்கு நீர் வருவது கேள்விக்குறியே!
ஆமை வேக கால்வாய் சீரமைப்பால் கடைமடைக்கு நீர் வருவது கேள்விக்குறியே!
ஆமை வேக கால்வாய் சீரமைப்பால் கடைமடைக்கு நீர் வருவது கேள்விக்குறியே!
ADDED : ஆக 06, 2024 01:01 AM

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட காவிரி கடைமடை பகுதிகளில், காலம் கடந்து தொடங்கிய கால்வாய் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், காவிரி கடைமடை பகுதிகளில் இந்தாண்டு, சம்பா பயிர் நடவு பணிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை தண்ணீர் பாயும், காவிரி கடைமடை பகுதியில், 32 ஆயிரம் ஏக்கர் வரை சம்பா சாகுபடி நடைபெறும். மேலும், ஏரி, குளங்களில் நிரப்பி, அந்த தண்ணீரையே பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
ஆயத்தம்
இதற்கிடையே, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக, கடந்த 28ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் வரும் காலத்தில் ஏரி, குளங்களை நிரப்பி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
மற்றொரு பக்கம், பாசனத்திற்கு பயன்படுத்தவும் விவசாயிகள் ஆயத்தமாகினர். மேலும், கல்லணை கால்வாயில், கடந்த 31 தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் கடைமடை கல்லணை கால்வாயில் கரை உடைப்புகளை தடுக்கவும், தண்ணீர் வீணாவதை தடுக்கவும், கடைமடை எல்லை பகுதியான மும்பாளை வரை, சீரான அளவில் தண்ணீர் செல்லவும், கால்வாய் கரைகளில் கான்கிரீட் தடுப்பு சுவர், தரைத்தளம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
இந்த பணி, காலம் கடந்து தாமதமாக, கடந்த மாதம் தொடங்கி, தற்போது வரை, ஆமை வேகத்தில் நடக்கிறது.
இதில், ஈச்சன்விடுதி, ஏனாதிகரம்பை, மேற்பனைக்காடு ஆகிய இடங்களில் தண்ணீரை தேக்கி திருப்பி விடும் ஷட்டர் பாலங்கள், முழுமையாக உடைக்கப்பட்டு, பணிகள் நடப்பதால், அந்தப் பணிகள் முடியும் வரை, கடைமடை வரை தண்ணீரை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால், தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சன்விடுதி பகுதியில், மணல் மூட்டைகளை அடுக்கி, கல்லணை தண்ணீரை தேக்கி, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால், காவிரி கடைமடை பகுதிகளில் இந்தாண்டு, சம்பா பயிர் நடவு பணிகள் நடைபெறுமா என்பது கேள்விகுறியாகி உள்ளது.
தடுப்புச்சுவர்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கல்லணையிலிருந்து, புதுக்கோட்டை மாவட்ட காவிரி கடைமடையின் கடைசி பகுதியான மும்பாலை வரை 148.65 கி.மீட்டர் தூரம் ஆகும். இதில், கடந்த ஆண்டு 92.20 கி.மீ., வரை கால்வாய்க்குள் தடுப்புச்சுவர், தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு 56.45 கி.மீ., அமைக்கப்படுகிறது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில், 15.95 கி.மீ., புதுக்கோட்டை மாவட்டத்தில் 40.5 கி.மீ., வரை, கால்வாய்க்குள் தடுப்புச்சுவர், தரைத்தளம் 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
கடந்த மாதம் வரை, கல்லணையில் தண்ணீர் மிக குறைவாக இருந்தது. மழையும் இல்லை; தண்ணீர் வரத்தும் இல்லாததால் கால்வாய்க்குள் தடுப்புச்சுவர், தரைததளம், பாலம், ஷட்டர்கள் அமைக்கும் பணி தொடங்கி விட்டது. தற்போது, தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், கல்லணையிலும் நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி கடைமடை பகுதிகளில், இன்னும் 15 நாட்களுக்குள் பணிகளை முடித்து தடையின்றி தண்ணீர் வழங்க, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை ஈச்சன்விடுதியிலிருந்து, பேராவூரணி பகுதிக்கு திருப்பி விடப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில், காலம் கடந்து தொடங்கிய கல்லணை கால்வாய் சீரமைப்பு பணிகளால், வழக்கம் போல, காவிரி கடைமடை விவசாய பகுதிகள் காய்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.