/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
குளம் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளை கலாய்த்து போஸ்டர்
/
குளம் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளை கலாய்த்து போஸ்டர்
குளம் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளை கலாய்த்து போஸ்டர்
குளம் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளை கலாய்த்து போஸ்டர்
ADDED : ஜூலை 31, 2024 08:43 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட துவார் கிராமத்தில், 100 ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்திருந்த, பாப்பான்குளம், 25 ஆண்டுகளுக்கு முன் வரை பாசனக்குளமாக இருந்துள்ளது.
இந்த குளம் கொஞ்சம், கொஞ்சமாக, ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது, குளம் இருந்த சுவடே தெரியாமல் வயல்களாகவும், தைல மரக்காடுகளாகவும் மாறி உள்ளது. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனக், கூறப்படுகிறது. இதையடுத்து, கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கருத்தாயுதக்குழுவை சேர்ந்த துரைகுணா, கடந்த ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாப்பான்குளம் குறித்த தகவல்களை பெற்றார்.
அதில், குளத்தை சிலர் ஆக்கிரமித்து, நெல், கடலை, உளுந்து போன்றவற்றை பயிர் செய்து வருவதும், பல ஏக்கரில் தைல மரம் நடப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், கறம்பக்குடி தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை திரைப்படக் குழுவினராக சித்தரித்து, துவார், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், 'நடுக்குளத்துக்குள்ளே நடவு வயல்' என திரைப்பட பெயர் சூட்டப்பட்டு, அதன் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு மேற்பார்வை, இசை, ஒளிப்பதிவு என, அரசு அதிகாரிகளின் பதவிகள் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளங்களிலும் பரவி வருகிறது.