/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ரெட் மீ 'டிவி' பணால் நிறுவனத்திற்கு அபராதம்
/
ரெட் மீ 'டிவி' பணால் நிறுவனத்திற்கு அபராதம்
ADDED : ஆக 31, 2024 12:50 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மெய்யனுாரை சேர்ந்தவர் சிவகுமார்.
இவர், காரைக்குடியில் உள்ள ஒரு ஷோரூமில், 2020ம் ஆண்டு, ரெட் மீ என்ற நிறுவனத்தின், 'டிவி'யை 32,499- ரூபாய்க்கு வாங்கினார். 2022ல் அந்த, 'டிவி' பழுதடைந்தது.
அந்த நிறுவனத்துக்கு புகார் அளிக்கப்பட்டபோது, புதிய, 'டிவி' கொடுக்கப்பட்டது. அந்த, 'டிவி'யும் 16 நாட்களில் பழுதடைந்தது. புகார் அளித்தும் அந்த, 'டிவி' நிறுவனத்தின் சேவை மையத்தில் இருந்து முறையான பதில் இல்லை.
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிவகுமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சேகர் பிறப்பித்த உத்தரவு:
'டிவி'யை விற்ற விற்பனையாளரோ அல்லது 'டிவி' நிறுவனத்தினரோ பழுதடைந்த, 'டிவி'யை மாற்றி புதிதாக வழங்க வேண்டும். அல்லது, 'டிவி' வாங்க செலவழிக்கப்பட்ட தொகையை, வாங்கப்பட்ட நாளில் இருந்து, ஆண்டுக்கு, 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.
சேவைக் குறைபாட்டுடன் செயல்பட்ட, காரைக்குடியைச் சேர்ந்த விற்பனையாளர், 20,000 ரூபாயை இழப்பீடாக சிவகுமாருக்கு வழங்க வேண்டும். அதுபோல, பெங்களூரை சேர்ந்த 'டிவி' உற்பத்தி நிறுவனத்தினர், 50,000 ரூபாயை சிவகுமாருக்கு வழங்க வேண்டும்.
இந்த இழப்பீட்டுத் தொகையை 45 நாட்களுக்குள் வழங்காவிட்டால், இழப்பீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு 12 சதவிகிதம் வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.