ADDED : பிப் 17, 2024 02:24 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கப்பத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 36. இவர், விபத்து, மீட்பு வாகன டிரைவராக பணிபுரிந்தார். இவரது மனைவி சரோஜாதேவி, 30; டோல் பிளாசா ஆம்புலன்ஸ் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை பணி முடிந்து வீட்டிற்கு இருவரும் பைக்கில் திருச்சி -- காரைக்குடி பைபாஸ் சாலையில் டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற கார், சாலையில் குறுக்கே சென்ற பள்ளி மாணவி மீது மோதாமல் இருக்க காரை திருப்பினர்.
அப்போது, பள்ளி மாணவி மீது கார் லேசாக மோதியதும் பதற்றம் அடைந்த கார் டிரைவர், காரை எதிர் திசையில் திருப்பிய நிலையில், எதிரே வந்த ரமேஷ் பைக் மீது மோதியது.
இதில், பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்ட ரமேஷ் மற்றும் சரோஜாதேவி படுகாயம் அடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் ரமேஷ் உயிரிழந்தார்.
பள்ளி மாணவி உட்பட காரில் வந்த சென்னையை சேர்ந்த ஐந்து பேரும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நமணசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.