/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
புதுகை அரசு தலைமை மருத்துவமனை ஆய்வு
/
புதுகை அரசு தலைமை மருத்துவமனை ஆய்வு
ADDED : ஆக 26, 2011 01:14 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின்
செயல்பாடு குறித்து சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் பங்கஜ்குமார் தலைமையிலான
குழுவினர் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மற்றும்
ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு
நிலவிரும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை சுட்டிக்காட்டி
கடும் கண்டனம் தெரிவித்தனர். வார்டுகளுக்கு சென்ற அதிகாரிகள் அங்கு
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட நோயாளிகளிடம்,
முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா?, மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடின்றி
வழங்கப்படுகிறதா?, டாக்டர்கள் நேரம் தவறாமல் மருத்துவ பரிசோதனை
செய்கிறார்களா?, வார்டுகள் சுத்தம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து
விளக்கம் கேட்டனர். இதற்கு பதிலளித்த நோயாளிகள், டாக்டர்கள் பெரும்பாலும்
வார்டுகளுக்கு ரவுண்ட் வருவதில்லை. ஒருவேளை வந்தாலும் நோயாளிகளை நெருங்க
தயங்குகின்றனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதை விட அவர்களது சொந்த
மருத்துவமனைகளில் பணியாற்றுவதில் தான் குறியாக உள்ளனர். நர்சுகளும்
டாக்டர்களின் சொந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதைத்தான் கௌரவமாக
கருதுகின்றனர் என அடுக்கடுக்காக பல புகார்களை தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த மருத்துவக் குழுவினர் டாக்டர்கள் மற்றும் நர்சுகளை அழைத்து
நோயாளிகளிடமிருந்து இதுபோன்ற புகார்கள் இனிமேல் வரக்கூடாது. நோயாளிகளுக்கு
முறையாக சிகிச்சை அளிக்கவேண்டும். மருத்துவமனை சுகாதாரத்துடன் உள்ளதா?
என்பதை அவ்வப்போது கண்காணிக்கவேண்டும்.அறுவை சிகிச்சை அரங்கில் உள்ள
கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்தும், ஆம்புலன்ஸ் வாகனங்களை
முறையாக பராமரித்து இயக்கப்படுகிறதா? என்பது குறித்தும் கண்காணிக்கவேண்டும்
என அறிவுரை வழங்கினர். அரசு மருத்துவமனைகளில் நிலவிவரும் குடிநீர்
பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண்பது, கழிப்பறை வசதிகளை அதிகரித்தல்,
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் குறித்தும் அதிகாரிகளுடன்
மருத்துவக்குழு அதிகாரிகள் விவாதித்தனர். ஆய்வின் போது, கலெக்டர் மகேஸ்வரி,
சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் குமரேசன், இணை இயக்குனர் டாக்டர்
சூரியகலா உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.