/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
/
பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
ADDED : டிச 15, 2024 02:07 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை சராசரி அளவுக்கு பெய்தது. எனினும், நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதன்படி, வடகிழக்கு பருவமழை அக்.2வது வார இறுதியில் தொடங்கியது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சாரல் மழை மட்டுமே பெய்தது. இதேபோல், பெஞ்சல் புயலின் போது, போதிய மழை பெய்யவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான தீர்நிலைகளில் தண்ணீர் இல்லை.
மழைக்காலம் முடிவுக்கு வர இன்னும் சில வாரங்கள் உள்ளநிலையில், இந்த ஆண்டு மழை பொய்த்து விடுமோ என்று விவசாயிகள் அச்சம் அடைந்தனர். ஆனால், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்ததால், குளம், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கந்தர்வக்கோட்டை அருகே துவார், கீழவாண்டான்விடுதி, உள்ளிட்ட கிராமங்களில் நூறு ஏக்கரில் கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், முளைக்கும் தருவாயில், தொடர்மழையால் வயலில் தண்ணீர் நிரம்பியதால் விதைக்கடலைகள் சேதமடைந்தன.
இதே போல, திருமயம் அருகே குழிபிறை பகுதிகளில் 150 ஏக்கரில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டிருந்த நிலையில், கதிர் விடும் பருவத்தில் பலத்த காற்று, மழை காரணமாக வயலில் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
தொடர்ந்து, கனமழையால், ஆவுடையார்கோவில், மீமிசல் சாலை மற்றும் ஆவுடையார்கோவில் ஒக்கூர் சாலையை இணைக்கும் இணைப்புச்சாலையை முற்றிலும் சேதமடைந்து, மழைநீர் சாலையில், பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கனமழையால் ஆயிங்குடி கிராமத்தில், சாலையோரம் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேறுடன் நேற்று சாலையில் விழுந்தது.
இதனால், அறந்தாங்கி- பேராவூரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், தீயணைப்புத்துறையினர் மரத்தை அகற்றி சாலையை சீரமைப்பு செய்தனர்.
தற்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் ஒரிரு நாட்களாக, பெய்து வரும் கனமழையால், குளம், ஏரி, கண்மாய்கள் நிரம்பி இருந்தாலும், அதனை சுற்றிய விவசாய பகுதிகளில் நெல், கடலை, பூக்கள் உற்பத்தி, வாழை போன்ற விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் நெற்பயிர்கள் நீரிழ் மூழ்கி சேதமடைந்துள்ளது.
எனவே, வேளாண்மை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.