ADDED : மார் 20, 2026 10:50 PM
புதுக்கோட்டை:அறந்தாங்கி அருகே நாகுடி சாலையில் நெல் கடத்தி சென்ற லாரியை ஆர்.டி.ஓ., பறிமுதல் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஆர்.டி.ஒ. அபிநயா கட்டுமாவடி, நாகுடி சாலையில் நேற்று முன் தினம் இரவு ரோந்து சென்று திரும்பும் போது, கண்டிச்சங்காடு அருகே ஒரு லாரி நெல் ஏற்றி சென்றது.
அந்த லாரியை ஆர்.டி.ஒ., நிறுத்தி லாரி டிரைவர் கானாடுகாத்தான் பகுதியை சேர்ந்த நவநீதன் என்பவரிடம் விசாரித்தார். ஊருக்குள் உள்ள நெல் குடோனுக்கு நெல் மூட்டைகளை இறக்க போவதாக கூறியுள்ளார். ஆனால், அங்கே நெல் குடோன் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மீண்டும் விசாரனை செய்தனர்.சிவகங்கை மாவட்டம், கண்டனூர் பகுதியில் உள்ள ஒரு நவீன அரிசி அறவை மில்லில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு கிராமத்தில் உள்ள ஒருவருக்கு 300 நெல் மூட்டைகள் கொண்டு செல்வதாக நடைசீட்டில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், லாரி சம்மந்தமே இல்லாமல் மாற்று வழியில் கண்டிச்சங்காடு நேரடி நெல்கொள்முதல் நிலையம் நோக்கி சென்றது தெரிய வந்தது. லாரி டிரைவர் நவநீதனின் தகவலும், நடைச்சீட்டின் தகவலும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் லாரியை சோதனை செய்த போது, அதில் 40 கிலோ எடையுள்ள 540 நெல் மூட்டைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால், நடைசீட்டில் 300 மூட்டைகள் என்று காட்டப்பட்டிருந்தது. தவறான தகவல்களுடன் லாரியில் நெல் மூட்டைகள் கொண்டு செல்வதை அறிந்த ஆர்.டி.ஒ., அபிநயா லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்.
இது 40 கிலோ மூட்டைகளாக இருப்பதால், வேறு ஏதேனும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நவீன அரிசி அறவை ஆலைக்கு அனுப்பியதை மாற்றி விற்பனைக்கு அனுப்பி உள்ளார்களா அல்லது உள்ளுர் புரோக்கர்கள் மூலமாகவே வியாபாரிகள் நெல் மூட்டைகளை விவசாயிகள் பெயரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்களா என்பதை அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
