/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கல்குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை
/
கல்குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை
கல்குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை
கல்குவாரி உரிமையாளர்களுக்கு எதிராக புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை
ADDED : ஜன 21, 2025 06:26 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி, 58; அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலராகவும், மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்தவர்.
அப்பகுதியில் உள்ள ஆர்.ஆர்., என்ற கல்குவாரி உரிமையாளர்களான ராசு மற்றும் ராமையா ஆகியோரிடம், கல்குவாரி சூப்பர்வைசராக சில ஆண்டுகளுக்கு முன் பணி செய்தார்.
சட்ட விரோதம்
பின், குவாரி உரிமையாளர்களுக்கும், ஜெகபர் அலிக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கல்குவாரி பணியில் இருந்து ஜெகபர் அலி வெளியேற்றப்பட்டார்.
அதன்பின், அந்த கல்குவாரி மீது அடுக்கடுக்கான புகார்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அளித்தார்; சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்தார். இதனால், கல் குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மீண்டும், கல் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருமயம் தாசில்தார், கலெக்டர் அலுவலகத்தில் ஜெகபர் அலி புகார் செய்தார்.
அதில், துளையானுார் பகுதியில் தனியார் கல்குவாரி நிறுவனம் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாகவும், பல ஆயிரம் டன் சக்கை கல் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி அப்பகுதி மசூதியில் தொழுகை முடிந்து, பைக்கில் வீட்டிற்கு சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதி, ஜெகபர் அலி உயிரிழந்தார். இது, உறவினர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
திட்டமிட்டு
அவரது மனைவி மரியம், 37, இது தொடர்பாக, கல் குவாரி உரிமையாளர்கள் ராமையா, 55, ராசு, 54, ராசுவின் மகன் தினேஷ், 25, விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளர் முருகானந்தம், 56, டிரைவர் காசி, 45, ஆகியோர் மீது புகார் அளித்தார்.
திருமயம் போலீசார் நடத்திய விசாரணையில், தொழில் போட்டி காரணமாக முருகானந்தம் மற்றும் அவரது லாரி டிரைவர் சேர்ந்து, ஜெகபர் அலியை திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி, கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
தொடர்ந்து, ஜெகபர் அலி இறப்பு கொலை வழக்காக நேற்று பதிவு செய்யப்பட்டு, கல் குவாரி உரிமையாளர் ராசு, தினேஷ், முருகானந்தம், காசி ஆகியோரை திருமயம் போலீசார் கைது செய்து, திருமயம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
கலெக்டரிடம் மனு
விசாரித்த நீதிபதி கோபாலகண்ணன், குற்ற வாளிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார்.
தலைமறைவாக உள்ள ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சட்டவிரோத கல் குவாரி குறித்து கலெக்டரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலர்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, நேற்று மீண்டும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மேலும், ஜெகபர் அலி உறவினர்கள், இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்; குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் எனக்கோரி, நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.