/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வேன் ஏற்றி ஜெகபர் அலி கொலை திருமயம் குவாரியில் அதிகாரிகள் ஆய்வு
/
வேன் ஏற்றி ஜெகபர் அலி கொலை திருமயம் குவாரியில் அதிகாரிகள் ஆய்வு
வேன் ஏற்றி ஜெகபர் அலி கொலை திருமயம் குவாரியில் அதிகாரிகள் ஆய்வு
வேன் ஏற்றி ஜெகபர் அலி கொலை திருமயம் குவாரியில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜன 22, 2025 01:46 AM

புதுக்கோட்டை:சமூக ஆர்வலர் ஜெகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட நிலையில், அவர் புகார் அளித்த திருமயம் கல்குவாரியில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே துளையானுார் பகுதியில் செயல்படும் ஆர்.ஆர்., புளுமெட்டல் என்ற கல்குவாரியில், சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக, வெங்களூர் பகுதி அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், அவர் கடந்த 17ம் தேதி தொழுகை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில், மினி லாரி மோதி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கு முதலில், சாலை விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு அவரது மனைவி மரியம் என்பவர், தன் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கல் குவாரி உரிமையாளர்கள் அவரை கொலை செய்து விட்டதாகவும் திருமயம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை செய்து, அது உண்மை என்று தெரிய வந்ததையடுத்து, சாலை விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றினர்.
இச்சம்பவம் தொடர்பாக, கல் குவாரி உரிமையாளர் உட்பட ஐந்து பேர் மீது, திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு பேரை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, துளையானுாரில் உள்ள சம்பந்தப்பட்ட கல் குவாரியில், நேற்று புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை, நில அளவைத்துறையினர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சட்ட விரோதமாக, எந்த அளவிற்கு கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்பதை, அதிகாரிகள், 'ட்ரோன்' வாயிலாக கணக்கீடு செய்தனர்.
இந்த கல்குவாரியை, கனிமவளத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, பல லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கல்குவாரிக்குள் தற்போது அதிகாரிகள் யாரும் உள்ளே செல்லக் கூடாது என்று, குவாரிக்கு செல்லும் வழியில் கிரஷர் மண் அதிக அளவில் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால், அருகே இருந்த வாய்க்காலுக்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.