/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய சாலை மறியல்
/
மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய சாலை மறியல்
ADDED : பிப் 01, 2024 01:57 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தீத்தானிப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் பாலமுருகன், 17; மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறார். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்.
இவருக்கும், துவாரை அருகே கொங்கராகோட்டையைச் சேர்ந்த மாற்று சமூகத்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து மாணவர் வீட்டிற்கு செல்வதற்கு பஸ் ஸ்டாப்பில் நின்றார். அப்போது, அங்கு வந்த ஆறு பேர், மாணவனை பைக்கில் துாக்கி வைத்து வேகமாகச் சென்றனர். அப்போது, அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
உடனே, ஆறு பேர் கும்பல் மாணவனை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதில், பலத்த காயமடைந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, மாணவனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் தீத்தானிப்பட்டியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவனை தாக்கிய ஆறு பேர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மழையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிவா, 25, என்பவரை கைது செய்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதை ஏற்று, சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், புதுக்கோட்டை -- பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.