/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தொழில்நுட்ப கோளாறால் சாலையில் தரையிறங்கிய சிறிய பயிற்சி விமானம் புதுக்கோட்டை அருகே பரபரப்பு
/
தொழில்நுட்ப கோளாறால் சாலையில் தரையிறங்கிய சிறிய பயிற்சி விமானம் புதுக்கோட்டை அருகே பரபரப்பு
தொழில்நுட்ப கோளாறால் சாலையில் தரையிறங்கிய சிறிய பயிற்சி விமானம் புதுக்கோட்டை அருகே பரபரப்பு
தொழில்நுட்ப கோளாறால் சாலையில் தரையிறங்கிய சிறிய பயிற்சி விமானம் புதுக்கோட்டை அருகே பரபரப்பு
ADDED : நவ 13, 2025 11:19 PM

புதுக்கோட்டை: வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் புதுக்கோட்டை கீரனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், 'இ.கே.வி., ஏர்' என்ற விமானி பயிற்சி பள்ளி, சேலம் விமான நிலையத்தில் செயல்படுகிறது.
அங்கு, தமிழகம், கேரளா, கர்நாடகாவை சேர்ந்த, 80 மாணவ - மாணவியர் பயிற்சி எடுத்து வருகின்றனர். அவர்கள் பயிற்சிக்கு இருவர் மட்டுமே செல்லக்கூடிய நான்கு சிறிய ரக விமானங்கள் உள்ளன.
சி.இ.எஸ்.எஸ்.என்.ஏ., 172 என்ற சிறிய ரக பயிற்சி விமானத்தில், நேற்று காலை, 11:00 மணியளவில் கேரளாவை சேர்ந்த ராகுல், 30, என்ற பயிற்சியாளர், ஆசிர், 27, என்ற பைலட் மாணவர் ஆகிய இருவரும் சேலம் விமான நிலையத்திலிருந்து திருச்சி நோக்கி பறந்து கொண்டிருந்தனர்.
மதியம், 12:45 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே அம்மாச்சத்திரம் வான்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, பயிற்சி விமானத்தின் முன்பக்க காற்றாடி உடைந்ததால், தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட, அந்த விமானத்தை இயக்கி வந்த பயிற்சியாளர், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது குறித்து தெரிவித்தார்.
உடனடியாக விமானத்தை தரையிறக்க வேண்டிய நிலையில், திருச்சி விமான நிலைய அதிகாரிகளின் அனுமதியுடன், திருச்சி --- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், திடீரென அந்த பயிற்சி விமானம் தரையிறக்கப்பட்டது. இதனால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருவரும் காயமின்றி தப்பினர்.
இந்த விமானத்தை பார்க்க அப்பகுதியில் மக்கள் கூட்டம் குவிய தொடங்கியது. கீரனுார் போலீசார், புதுக்கோட்டை மாவட்ட போலீசார், திருச்சி விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
விமானம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கியதால், புதுக்கோட்டை --- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலைய இயக்குநர் ராஜு தலைமையில் அதிகாரிகள் நேரில் விசாரித்தனர். விமான பைலட்டின் சாதுரியமான முயற்சியால் விபத்து தவிர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

