ADDED : ஜூலை 25, 2025 02:16 AM
புதுக்கோட்டை:ஆவுடையார்கோவிலில் முன்விரோதம் காரணமாக இரண்டு சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் காமராஜர் நகரை சேர்ந்த காத்தமுத்து என்பவரது மகன்கள் கண்ணன், 35, கார்த்திக், 29. இதில், கண்ணன், வி.சி., கட்சி மற்றும் சமூக சமத்துவ கூட்டமைப்பில் இருந்தார். சகோதரர்கள் இருவரும், அதே பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே, அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் நேற்றிரவு இறந்து கிடந்தனர்.
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி, ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கண்ணன் மீது பல்வேறு மாவட்டங்களில் குற்றவழக்குகள் இருப்பது தெரியவந்தது.
முன்விரோதம் காரணமாக இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந் த மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இரட்டை கொலையால் ஆவுடையார்கோவில் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.