ADDED : பிப் 19, 2025 06:51 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள முகவை ஊருணி கரையில் உள்ள நடை பாதையில் மின்விளக்குகள் எரியாததால் அங்கு நடைப்பயிற்சி செல்வோர் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரண்மனை வடக்கு, மேற்கு, அக்ரஹாரம் பகுதிகளை மையமாக கொண்டு 25 ஏக்கரில் முகவை ஊருணி வெட்டியுள்ளனர்.மதுரையில் இருந்து பெரிய கண்மாய்க்கு வரும் வைகை ஆற்று தண்ணீரை கால்வாய் அமைத்து முகவை ஊருணிக்கு கொண்டு வந்துள்ளனர். மழைநீர் முழுவதும் சேமிக்க முடிவதால் ஊருணியில் எப்போதுமே தண்ணீர் உள்ளது. தற்போது சிலர் கழிவுநீரை விடுகின்றனர். குப்பையும் கொட்டுவதால் ஊருணி நீர் மாசடைகிறது.இந்நிலையில் ஊருணியை ஆழப்படுத்தி சுற்றிலும் வேலி அமைத்து, கரையில் நடைபாதை அமைத்துள்ளனர்.
இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சில நாட்களாக மின்விளக்குகள் எரியாததால் மாலை, அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை. இருள் சூழ்ந்துள்ளதால் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே முகவை ஊருணில் மின்விளக்குகளை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

