/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் செல்லும் வழியில் கழிவுகள் பக்தர்கள் அதிருப்தி: நெடுஞ்சாலை ஓரம் குவிக்கப்படுவதால் துர்நாற்றம்

ADDED : மார் 15, 2025 05:21 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே திருமண மகால்களில் இருந்து பாலிதீன், குப்பை கழிவுகளை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அதிகளவில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்து அருவருப்புடன் செல்கின்றனர்.
தங்கச்சிமடம் ஊராட்சியில் ராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 5 திருமண மகால்கள் உள்ளது. இதில் சில திருமண மகாலில் இருந்து உணவு கழிவுகள், பாலிதீன் பை, கப் மற்றும் குப்பையை தொட்டியில் சேகரித்து ஊராட்சி குப்பை சேகரிக்கும் வண்டியில் கொட்டி விடுகின்றனர்.
அதே நேரம் ஒரே ஒரு தனியார் திருமண மகாலில் இருந்து பாலிதீன் பைகள், உணவு கழிவுகள், குப்பையை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டி மலைபோல் குவிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும் இக்கழிவுகளை உட்கொள்ளும் கால்நடைகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் குப்பை குவியலால் ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அருவருப்பு அடைகின்றனர்.
இதுகுறித்து மக்கள் பலமுறை புகார் செய்தும் அந்த மகால் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
எனவே இங்கு குப்பையை அகற்றுவதுடன் மகால் உரிமையாளருக்கு அபராதம் விதித்து எச்சரிக்க வேண்டும். இங்கு குப்பை கொட்டுவதை தடுத்து ராமேஸ்வரம் கோயில் புனிதத்தை பாதுகாக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.