/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பலமுறை மனு அளித்தும் நீர்நிலைகளை துார்வாரல; விவசாயிகள் குமுறல் .. மிளகாய், பருத்திக்கும் உரிய விலையும் கிடைக்கல..
/
பலமுறை மனு அளித்தும் நீர்நிலைகளை துார்வாரல; விவசாயிகள் குமுறல் .. மிளகாய், பருத்திக்கும் உரிய விலையும் கிடைக்கல..
பலமுறை மனு அளித்தும் நீர்நிலைகளை துார்வாரல; விவசாயிகள் குமுறல் .. மிளகாய், பருத்திக்கும் உரிய விலையும் கிடைக்கல..
பலமுறை மனு அளித்தும் நீர்நிலைகளை துார்வாரல; விவசாயிகள் குமுறல் .. மிளகாய், பருத்திக்கும் உரிய விலையும் கிடைக்கல..
ADDED : ஜூன் 29, 2024 06:11 AM

ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று காலை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வேளாண் இணை இயக்குனர் கண்ணையா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
பாஸ்கர பத்மநாபன், பரமக்குடி: 3 ஏக்கரில் விவசாயம் செய்கிறேன். மான்கள் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. விவசாயம் செய்ய முடியவில்லை. அரசு செலவில் வேலி அமைத்து தர வேண்டும்
கலெக்டர்: வன விலங்குகள் சேதத்திற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
முத்துராமு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: நெற்பயிர் முதிர்ச்சி நிலையில் பாதிக்கப்பட்டாலும் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இவ்வாண்டு ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும்.
கலெக்டர்: பரிசோதனை திடல் அமைத்து நெற்பயிர் பாதிப்பு அளவிடப்படுகிறது. காப்பீடு தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்
கண்ணப்பன், மாங்குடி: கடந்த 10 ஆண்டுகளாக பரளை ஆற்று வாய்க்கால்களை துார்வாரவில்லை. இது தொடர்பாக 6 முறை மனு அளித்தும் பலனில்லை.
ராமநாதபுரத்தில் இருண்ட ஆட்சி நடக்கிறது. 1100 கண்மாய்கள் துார்வாரப்படாமல் மழைநீர் வீணாகிறது.
கலெக்டர்: பரளை ஆற்று வாய்க்கால் துார்வார திட்டமதிப்பீடு செய்து நபார்டு வங்கி நிதியை எதிர்பார்த்துள்ளனர். எந்த கண்மாய் எனக்கூறினால் மண் அள்ள அனுமதி வழங்கப்படும்.
தொடர்ந்து ஒவ்வொரு ஒன்றியமாக விவசாயிகள் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது உத்திரகோசமங்கை, போகலுார் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்.
இவ்வாண்டு பருத்தி கிலோ ரூ.45, மிளகாய் கிலோ ரூ.150 ஆக விலை குறைந்து விட்டதால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை.
இப்படியே போனால் எங்களுக்கு பிறகு விவசாயம் செய்ய யாரும் வரமாட்டார்கள். பருத்தி, மிளகாய்க்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மழைக்காலத்திற்குள் நீர்நிலைகளை துார்வார வேண்டும்.
மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள் விற்பனையால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர் என விவசாயிகள் பேசினர்.
கலெக்டர்: பருத்தி, மிளகாய் விலை தொடர்பாக வேளாண் கமிஷனரிடம் பேசியுள்ளேன். கண்மாய்கள், நீர்நிலைகளை துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண் தேவைப்படும் விவசாயிகள் தாசில்தாரிடம் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பாஸ்கர மணியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் வரதராஜன், அரசு அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.

