/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1 கோடி கஞ்சா சிக்கியது
/
இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1 கோடி கஞ்சா சிக்கியது
ADDED : செப் 08, 2024 01:18 AM

ராமநாதபுரம்: தமிழகத்தில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களுக்கு அருகில் இலங்கை உள்ளதால் கடல் வழியாக அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்கிறது.
இலங்கை மன்னாரை சேர்ந்த சிலர் பைபர் படகில் இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லை அருகே தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா மூட்டைகளை வாங்கிச் செல்வதாக இலங்கை கடற்படையின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
கடலில் வீச்சு
அதன்படி, மன்னார் அருகே பேசாளை கடற்கரையில் வைத்து கஞ்சாவை வாங்க சென்ற இருவரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களிடமிருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
போனில், கஞ்சா கைமாறும் இடம் குறித்த ஜி.பி.எஸ்., நம்பரை கைப்பற்றி நேற்று முன்தினம் இரவு முழுதும் இந்திய - இலங்கை சர்வதேச கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இருந்து இலங்கை நோக்கி சென்ற நாட்டுப்படகு இலங்கை கடற்பரப்பில் நுழைந்து கஞ்சா வாங்க வருபவர்களுக்காக காத்திருந்தது தெரிந்தது.
அங்கு சென்ற இலங்கை கடற்படை ரோந்து படகை பார்த்ததும், தமிழக படகில் இருந்தவர்கள் கஞ்சா மூட்டைகளை கடலில் வீசி தப்பினர்.
அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட போது, படகில் தப்பி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தனர்.
இதுகுறித்து இந்திய கடற்படையினரிடம் தெரிவித்த இலங்கை கடற்படையினர், கடலில் மிதந்த ஐந்து மூட்டை கஞ்சாவை கைப்பற்றினர்.
பறிமுதல்
அவற்றில் 188 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை இலங்கை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கஞ்சா சாக்கு மூட்டைகளில் புதுக்கோட்டை மணல்மேல்குடி என, தமிழில் எழுதப்பட்டிருந்தது. கஞ்சா மூட்டைகள் இங்கிருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், 2024ல் இதுவரை இலங்கை கடற்படை, கடேலோர காவல் படையினர் இணைந்து 1,242 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா மூட்டைகளில் மணல்மேல்குடி என எழுதப்பட்டிருந்ததால் ராமநாதபுரம், புதுக்கோட்டை கியூ பிரிவு போலீசார் மணல்மேல்குடி, தொண்டி, எஸ்.பி.பட்டினம் கடற்கரைப்பகுதியில் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.