/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.30,000 லஞ்சம் 2 இன்ஜி.,க்கள் சிக்கினர்
/
ரூ.30,000 லஞ்சம் 2 இன்ஜி.,க்கள் சிக்கினர்
ADDED : ஏப் 13, 2024 02:12 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆண்டுதோறும் வைகை ஆற்றில் சித்திரை திருவிழாவின் போது ராட்டினம் அமைப்பது வழக்கம். பரமக்குடியைச் சேர்ந்த மணிகண்டன், 38, ராட்டினம் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று கேட்டார். அதிகாரிகள் அந்த மனுவை நிராகரித்ததால் உயர் நீதிமன்றம் மதுரை கிளையை அணுகி அனுமதி பெற்றார்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு 1.50 லட்சம் நன்கொடையும், பரமக்குடி பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு அலுவலகத்திற்கு, 65,000 ரூபாயும் செலுத்தி அனுமதி பெற்றுக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, மணிகண்டன் பொதுப்பணித்துறைக்கு, 65,000 ரூபாயை செலுத்தி விட்டு உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், 59, என்பவரை சந்தித்து தடையில்லா சான்று கேட்டார்; தரவில்லை. உதவிப் பொறியாளர் சம்பத்குமார், 32 என்பவரை போய் பாருங்கள் எனக்கூறி அனுப்பினார். அவரை அணுகிய போது, 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய 30,000 ரூபாயை பரமக்குடி அலுவலகத்தில் உதவிப்பொறியாளர் சம்பத்குமாரிடம் மணிகண்டன் நேற்று மதியம் கொடுத்தார்.
மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக அப்பணத்தை வாங்கிய அவரை பிடித்தனர். இதையடுத்து இன்ஜினியர்கள் கார்த்திகேயன், சம்பத்குமார் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

