/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேர் கைது: பாம்பன் பாலத்தில் மறியல்
/
நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேர் கைது: பாம்பன் பாலத்தில் மறியல்
நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேர் கைது: பாம்பன் பாலத்தில் மறியல்
நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேர் கைது: பாம்பன் பாலத்தில் மறியல்
ADDED : ஜூலை 02, 2024 05:30 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன், நம்புதாளையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல் செய்தனர்.
ஜூன் 30ல் பாம்பன், திருவாடானை அருகே நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடித்தனர். அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி முனையில் 3 பாம்பன் படகுகள், நம்புதாளையை சேர்ந்த ஒரு நாட்டுப்படகை மடக்கி பிடித்தனர்.
இப்படகில் இருந்த மீனவர்கள் இருதயராஜ் 47, கிரேசியான் 52, லீனஸ் 46, ஆரோக்கிய மெக்ரின் 23, டிகாஸ் 23, மைக்கேல் 49, தயாளன் 45, முருகன் 46, சக்திசெல்வம் 18, இசக்கிமுத்து 59, களஞ்சியம் 43, ராஜன் 57, ஜார்ஜ் 50, கென்னடி 55, அமலதாஸ் 51, அந்தோணி 55, தேவதாஸ் 57, லாரன்ஸ் 67, சூசைராஜ் 60, பெரியசாமி 56, ஆறுமுகம் 52, பாண்டி 43, ராமமூர்த்தி 35, குமராண்டி 52, பழனி 30, ஆகிய 25 பேரை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் பாம்பன் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி நேற்று காலை 8:00 மணிக்கு பாம்பன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின் ஊர்வலமாக புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் செய்தனர்.
சிறிது நேரத்திற்கு பின் பாம்பன் பாலம் நுழைவில் அமர்ந்து ஏராளமான மீனவ பெண்கள் உள்ளிட்ட பலர் மறியலில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், கூடுதல் எஸ்.பி., காந்தி, டி.எஸ்.பி., உமாதேவி ஆகியோர் மீனவர்களை சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தனர்.
ஒன்றரை மணி நேரம் நடந்த மறியலால் ராமேஸ்வரம்- மதுரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் போராட்டம்
நேற்று மாலை பாம்பனில் நாட்டுப்படகு மீனவர் சங்க கூட்டம் சங்க மாவட்ட தலைவர் ராயப்பன் தலைமையில் நடந்தது. இதில் இன்று(ஜூலை 2) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும், ஜூலை 5ல் காலை பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியலில் ஈடுபடவும், மதியம் மண்டபம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.