/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் 2 மணி நேரத்தில் 5 செ.மீ., பெய்த கோடை மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
/
பரமக்குடியில் 2 மணி நேரத்தில் 5 செ.மீ., பெய்த கோடை மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
பரமக்குடியில் 2 மணி நேரத்தில் 5 செ.மீ., பெய்த கோடை மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
பரமக்குடியில் 2 மணி நேரத்தில் 5 செ.மீ., பெய்த கோடை மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : மே 11, 2024 10:26 PM

பரமக்குடி:பரமக்குடியில் நேற்று 2 மணி நேரம் வரை 5 செ.மீ., அளவில் மழை கொட்டி தீர்த்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமக்குடியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் சேர்ந்து கொண்டதால் பொதுமக்கள் புழுக்கத்தில் தவித்தனர்.
இதனால் வீடுகளில் மக்கள் நாள் முழுவதும் மின்விசிறி மற்றும் ஏ.சி., களை பயன்படுத்தி வந்தனர். மேலும் தினமும் மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை ரோட்டில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 3 நாட்களாக பரமக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் 1:00 மணிக்கு பரமக்குடி நகரில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
கனமழை 2 மணி நேரம் வரை நீடித்தது. நகரின் தாழ்வான அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரும்பாலான தெருக்களில் மக்கள் வீடுகளை கட்டும் நிலையில் வாறுகால்களில் மணல் அடைப்பால் தண்ணீர் செல்ல முடியாமல் நீண்ட நேரம் தேங்கியது.
வாறுகால்களில் தேங்கிய குப்பை ரோடு முழுவதும் கழிவு நீர் பரவி மக்கள் சிரமப்பட்டனர். 5 செ.மீ., வரை கொட்டி தீர்த்த கோடை மழையால் புழுக்கம் தணிந்தது. கோடை உழவுக்கு இந்த மழை பயன்படும் என்பதால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
*கமுதி பகுதியில் நேற்று காலை 11:00 மணிக்கு மேல் இடியுடன் கமுதி, கோட்டைமேடு உட்பட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் 2 மணி நேரத்திற்கு மேல் கோடை மழை கொட்டித் தீர்த்தது. மழை பெய்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதேபோன்று பல்வேறு தெருக்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.