/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்று மாலை அழகர் கோயில் திரும்புகிறார்
/
இன்று மாலை அழகர் கோயில் திரும்புகிறார்
ADDED : ஏப் 27, 2024 04:07 AM

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் அழகர் இன்று மாலை கோயிலுக்கு திரும்புகிறார்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில்ஏப்.23 அதிகாலை கள்ளழகர் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்.
தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை பல ஆயிரம் பக்தர்கள் மஞ்சள் நீர் பீய்ச்சி வரவேற்றனர்.
மறுநாள் இரவு அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த நிலையில் விடிய விடிய தசாவதார காட்சி அளித்தார். மேலும் கருட வாகனம் ஏறிய பெருமாள் நேற்று மாலை ராஜாங்க திருக்கோலத்தில் பட்டு பல்லக்கில் அமர்ந்தார்.
அப்போது பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அனைத்து ஆயுதங்களையும் ஏந்தி ராஜாவாக சேவை சாதித்தார். தொடர்ந்து இன்று காலை கோடாரி கொண்டை இட்டு வளரி, கத்தி, தடி ஏந்தி பூப்பல்லக்கில் காலை 7:00 மணிக்கு வைகை ஆற்றை விட்டு கிளம்பி முக்கிய வீதிகளில் நகர்வலம் வருகிறார்.
தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு தனது ஆஸ்தானத்தை அடைய உள்ளார். அப்போது இரவு கண்ணாடி சேவை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

