/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாரியூரில் சித்ரா பவுர்ணமியில் கடலுக்குள் வலை வீசும் படலம்
/
மாரியூரில் சித்ரா பவுர்ணமியில் கடலுக்குள் வலை வீசும் படலம்
மாரியூரில் சித்ரா பவுர்ணமியில் கடலுக்குள் வலை வீசும் படலம்
மாரியூரில் சித்ரா பவுர்ணமியில் கடலுக்குள் வலை வீசும் படலம்
ADDED : ஏப் 23, 2024 11:07 PM

சாயல்குடி- சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புராதான சிறப்பும் பெற்ற பவளநிறவல்லி, பூவேந்திய நாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா ஏப்.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று கடலுக்குள் வலை வீசும் படலம் நடந்தது.
வருண பகவானால் பூஜிக்கப்பட்ட இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருக்கல்யாண உற்ஸவத்திற்கு முன்பாக மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் சிவபெருமான் வேடமணிந்த சிவாச்சாரியார் வலையை வீசி தொல்லை தரும் சுறா மீனை வெல்வார். சுறா மீனுக்கு சாப விமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நேரடியாக நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு உற்ஸவ மூர்த்திகளின் புறப்பாடு நடந்தது. மன்னார் வளைகுடா கடலில் சிவபெருமான் வேடமணிந்த சிவாச்சாரியார் மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர், பக்தர்கள் நாட்டுப்படகில் சென்றனர்.
அப்போது சிவபெருமானின் 57-வது படலமாக வலை வீசிய படலத்தின் நிகழ்வாக சுறா மீன் (பொம்மை) மிதக்க விடப்பட்டது. அது வலை வீசி பிடிக்கப்பட்டது. கரைக்கு கொண்டுவரப்பட்ட சுறா மீனுக்கு சாப விமோசனம் அளித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை காண ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.
பின்னர் மீண்டும் கோயிலுக்குள் உற்ஸவமூர்த்திகள் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அலங்கார பந்தலில் நேற்று காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. சிவாச்சாரியார் மங்கள நாணை பவள நிறவல்லியம்மனின் கழுத்தில் சூட்டினார். வேத மந்திரங்கள் முழங்க மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு பள்ளியறை பூஜை நடந்தது.
ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் மற்றும் ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

