/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வகுப்பறை இன்றி அவதி; நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில வழி மாணவிகள் பாதிப்பு
/
வகுப்பறை இன்றி அவதி; நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில வழி மாணவிகள் பாதிப்பு
வகுப்பறை இன்றி அவதி; நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில வழி மாணவிகள் பாதிப்பு
வகுப்பறை இன்றி அவதி; நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில வழி மாணவிகள் பாதிப்பு
UPDATED : மே 12, 2024 07:04 AM
ADDED : மே 11, 2024 10:18 PM

ராமநாதபுரம்:மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் போதுமான வகுப்பறைகள் இன்றி மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பிளஸ் 1 ஆங்கில வழி வகுப்பு துவங்கப்படாமல் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1500 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பயன்பாட்டில் இருந்த சேதமடைந்த வகுப்பறை கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அறைகள் இன்றி ஒரு அறையில் இரு வகுப்புகளாக பிரித்து அமர வைத்துள்ளதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கூடுதல் வகுப்பறை கட்டித்தரக் கோரி பலமுறை நகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
இதன் காரணமாக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி துவங்கி ஒரு ஆண்டிற்கும் மேலாக ஆமை வேகத்தில் வேலை நடக்கிறது. நடப்பு ஆண்டில் வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டும் பணி துவங்கியுள்ளது.
இதனால் போதிய வகுப்பறைகள் இல்லாமல் 2024-25 கல்வி ஆண்டிலும் பிளஸ் 1 ஆங்கில வழி வகுப்புகள் துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 3 வகுப்பறைகள் கட்டுவதும் போதாது. மேல்தளத்திலும் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட கல்வித்துறை, நகராட்சி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கூடுதலாக வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் அதற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.