/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெறும் காலில் வண்டி இழுக்கும் தொழிலாளர்கள்
/
வெறும் காலில் வண்டி இழுக்கும் தொழிலாளர்கள்
ADDED : ஏப் 30, 2024 10:49 PM

கீழக்கரை, - கால் வயிற்று கஞ்சிக்காக பாடுபட்டு வியர்வை சிந்தி கொளுத்தும் கோடை வெயிலிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் தள்ளுவண்டி இழுக்கும் தொழிலாளர்களின் உழைப்பு எப்போதும் உன்னதமானது. இன்று(மே 1) தொழிலாளர் தினத்தில் அவர்களை வணங்குவோம்.
இவர்கள் தனக்காக இல்லாவிட்டாலும் பிறர் நலன் சார்ந்த பணிகளைச் செய்து குறைந்த அளவு வருமானமே ஈட்டுகின்றனர். கீழக்கரை நகரில் இட நெருக்கடியான பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் சுமை துாக்கும் தொழிலாளர்கள் தனது உடல் உழைப்பை நம்பி தள்ளுவண்டிகளில் பொருட்களை இழுத்து செல்லும் செயல் தினம் தோறும் அரங்கேறி வருகிறது.
தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலில் செருப்பு கூட அணியாமல் வெறும் கால்களில் தொழிலாளர்கள் வண்டிகளை இழுத்துச் செல்வதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது.
தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் தொழிலாளர்கள் பணி செய்ய வேண்டும்.
இந்த மே 1 தொழிலாளர் தினத்திலாவது இதுபோன்ற தொழிலாளர்களுக்கு பணிச்சுமையை குறைத்து உழைத்தவர் நெற்றி வியர்வையின் ஈரம் காய்வதற்கு முன் உரிய ஊதியம் கையில் கிடைப்பது என்பது கஷ்டமான விஷயமாகவே உள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள், மண் தோண்டும் தொழிலாளர்கள், சென்ட்ரிங் வேலை பார்ப்போர், சுமை துாக்கும் தொழிலாளர்கள் பெயின்டர்கள் உள்ளிட்ட உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு செயல்படும் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கான உரிய பங்களிப்பை முறையாக கண்டறிவது தொழிலாளர் நலத்துறையின் கடமையாகும்.
விபத்தில் காயம் அடைவோர் பெறவேண்டிய இழப்பீடுகள், காப்பீட்டு திட்டங்கள் குறித்த உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது அவசியமானது. பேக்கரி, ஓட்டல்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளில் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கவும், இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து கல்வி கற்க வைக்கவும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.