ADDED : ஜூன் 08, 2026 03:10 PM
திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மின்தடையை கண்டித்து பஸ் மறியல் போராட்டம் நடந்தது. திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பகல், இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று அப்பகுதி மக்கள் திருவாடானை– மங்களக்குடி சாலையில் அஞ்சுகோட்டையில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பஸ் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இப்போராடத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
