/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிபர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
/
வாலிபர் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : மார் 08, 2025 01:32 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் வாலிபரை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
ராமநாதபுரத்தில் காதல் தகராறில் வினோத்மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் வினோத்மணியை தெற்கு காட்டூரை சேர்ந்த சரவணன் 34, கொலை செய்த தகவல் ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் அருண்குமாருக்கு 22, தெரியவந்துள்ளது. அதுகுறித்து சரவணனிடம் அருண்குமார் கேட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சரவணன், அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். தனது நண்பர்கள் மதுரை விளாச்சேரியை சேர்ந்த வீரணன் மகன் உதயக்குமார் 25, மதுரை முனியம்மாள்புரம் ராஜா மகன் பால்பாண்டி 24, ஆகியோருடன் சேர்ந்து 2014 டிச.,13ல்அருண்குமாரை மது அருந்த அழைத்து சென்றனர். மதுவில் விஷம் கலந்து அருண்குமாருக்கு கொடுத்து கொலை செய்தனர். அவரது உடலை மதுரை கருப்பாயூரணி பகுதி வரிச்சியூரில் வீசிச் சென்றனர். கருப்பாயூரணி போலீசார் விசாரித்து வந்தனர்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு 2022ல் மாற்றப்பட்டது.
சரவணன், உதயக்குமார், பால்பாண்டி ஆகியோரை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடக்கிறது.
கைதான மூவரில் உதயக்குமார் இறந்து விட்டார். சரவணன், பால்பாண்டி ஆகியோர் மட்டும் ஆஜராகி வருகின்றனர். கொலை நடந்து 10 ஆண்டுகளுக்குப் பின் மாஜிஸ்திரேட் பிரபாகரன் முன் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.