/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமான ரோட்டை சீரமைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
/
சேதமான ரோட்டை சீரமைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 20, 2024 04:27 AM
ஆர்.எஸ்.மங்கலம்: பல ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில் உள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும் என ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் ராதிகா தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் லட்சுமி, மலைராஜ், துணைத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
பாண்டி, தி.மு.க.,: சிறுநாகுடி ஊராட்சியில் பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த பிரச்னை உள்ளது. புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த கருங்குடி ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.
யோகேஸ்வரன், தி.மு.க.,: எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மோசமான சாலைகள் உள்ளன.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை இல்லை. கூட்டத்திற்கு நாங்கள் டீயும், மிக்சரும் சாப்பிடத் தான் வருகிறோம் என்று தோன்றுகிறது.
நான்கு ஆண்டுகளாக வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லை. பொதுமக்களுக்கு எதுவும் செய்யாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்கும் நிலையில் உள்ளோம் என்றார்.
வெங்கடாஜலபதி, தி.மு.க.,: ஏ.ஆர்.மங்களம், மேல்பனையூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் முறையான ரோடு வசதி இல்லை. நம்ம ஊரு சூப்பர் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் எனது கவுன்சிலுக்கு உட்பட்ட கிராம பகுதியில் வந்து பார்த்தால் அங்கு நிலவும் அவலம் அதிகாரிகளுக்கு தெரியவரும் என்றார்.
பிரபு, தி.மு.க.,: புல்லமடை, சப்பானியேந்தல், ஓடைகால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
யூனியன் தலைவர்: மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.