/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சர்வீஸ் ரோடு சேதம்; ரோடு சீரமைப்பது யார் பொறுப்பு
/
பரமக்குடி சர்வீஸ் ரோடு சேதம்; ரோடு சீரமைப்பது யார் பொறுப்பு
பரமக்குடி சர்வீஸ் ரோடு சேதம்; ரோடு சீரமைப்பது யார் பொறுப்பு
பரமக்குடி சர்வீஸ் ரோடு சேதம்; ரோடு சீரமைப்பது யார் பொறுப்பு
ADDED : செப் 01, 2024 11:47 PM

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் விபத்து அச்சத்தில் வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ள நிலையில் வாகன எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. இதனால் பெரிய பஜார் உட்பட பரமக்குடி நகர், தேசிய நெடுஞ்சாலையிலும் ஓரளவிற்கு நெரிசல் குறைந்துள்ளது.
இதன்படி காட்டு பரமக்குடி துவங்கி காக்கா தோப்பு பகுதி வரையும், எமனேஸ்வரம் ஆற்றுப்பாலம் துவங்கி ஜீவா நகர் வரையும் வைகை ஆற்றின் இரு ஓரங்களிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது.
பரமக்குடி பகுதியில் அமைக்கப்பட்ட ரோடு கடந்த ஓராண்டு காலமாக குண்டும், குழியுமாக மாறி வருகிறது. மேலும் வைகை ஆறு கரையில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் உடைந்து விழுந்துள்ளதுடன் பல இடங்களில் இரும்பு போல்ட் நட்டுகள் திருடப்பட்டு வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ள சூழலில் குண்டும் குழியுமான ரோட்டில் தினமும் விபத்துக்கள் நடக்கிறது. இதே போல் ஆற்றுப்பாலம் கீழ் பகுதியில் ரோடு முற்றிலும் சேதமடைந்து ஒரு அடிவரை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இரவு நேரங்களில் பள்ளி மாணவர்கள், பள்ளி வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் நிலையில் உள்ளது. இச்சூழலில் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் யார் ரோட்டை சீரமைப்பது, பராமரிப்பது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஆகவே பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் ரோட்டின் நிலையை உணர்ந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.