ADDED : ஏப் 29, 2026 06:52 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கூட்டாம்புளி ரோட்டோரம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூட்டாம்புளி ரோட்டோரம், அப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டாம்புளி, சாத்தமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தினர் பயனடைகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் இரு பக்க மின்கம்பங்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
ஆபத்தான முறையில் இரு பக்கமும் உள்ள மின்கம்பிகளின் இழுவிசையில் நின்று கொண்டுள்ளன. அதிக வாகன போக்குவரத்து உள்ள ரோட்டோரம் இந்த டிரான்ஸ்பார்மர் ஆபத்தான நிலையில் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான டிரான்ஸ்பார்மரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
