/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
*ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் ஏமாற்றம்: கோயில் நிலம் மீட்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம்
/
*ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் ஏமாற்றம்: கோயில் நிலம் மீட்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம்
*ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் ஏமாற்றம்: கோயில் நிலம் மீட்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம்
*ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் ஏமாற்றம்: கோயில் நிலம் மீட்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜன 22, 2024 04:44 AM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கபட்டுள்ளதை கண்டறிந்து மீட்கும் பணிகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மன்னர்கள் காலத்தில் மானியமாக வழங்கப்பட்ட கோயில் நிலங்களுக்கு கோயில் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோயில் சுவாதீனத்தில் இல்லாமல் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.
அந்த நிலங்களை மீண்டும் கோயிலுக்கு சொந்தமாக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். கோயில் நிலங்களை மீட்பது தொடர்பான ஆய்வுக்குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்தனர். திருவாடானை தாலுகாவில் சில மாதங்களுக்கு முன்பு ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை டி.ஜி.பி.எஸ் கருவியால் அளவிடும் பணிகள் நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 364 கோயில்கள் உள்ளன. இதில் 147 கோயில்களில் 4145 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அளவீடு செய்த நிலங்களில் 886 எல்லை கற்கள் அமைக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி.எஸ் கருவி மூலம் அளவீடு செய்யப்படுவதால் எளிய முறையில் அளந்து வரைபடங்கள் தயாரிக்கலாம். ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன புல எல்லை கற்களை கண்டறியலாம். இதன் மூலம் கோயிலுக்கு சொந்தமான அசையா சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்கப்பட்டு கோயிலுக்கு சொந்தமாக்கப்படும்.
ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அசையா சொத்துக்கள், விவசாய நிலங்கள், காலி மனைகள், காலியிடங்கள் என அனைத்தும் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் தயாரிக்கும் பணி நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடந்து வருகிறது.
இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். இதுவரை நடந்த அளவீடு பணியில் ஏராளமானோர் கோயிலுக்கு சொந்தமான இடங்களை அவர்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்துள்ளனர். சிலர் விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்களை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றனர். ஆனால் இதுவரை நிலங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:
கோயில் நிலங்களை ஆய்வு செய்யும் பணிகள் மட்டுமே நடந்துள்ளது. ஆனால் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே கோயில் நிலங்களை மீட்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-----