/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அக்னி தீர்த்த கடலில் நீராட குவிந்த பக்தர்கள்
/
அக்னி தீர்த்த கடலில் நீராட குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 05, 2024 10:58 PM

ராமேஸ்வரம்:அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
நேற்று ஆனி அமாவாசை யொட்டி தமிழகத்தில் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் 'சிவசிவ' என கோஷமிட்டபடி புனித நீராடினர். இதன்பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள்.
பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் திட்டக்குடி தெரு, சன்னதி தெருவில் போக்குவரத்து நெரிசல் இருந்தது.
கடல் உள்வாங்கியது
ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு 100 மீ., உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தது.
மேலும் சிறிய மீன் குஞ்சுகள், கடல் சிற்பிகள் சிறுகுழியில் தேங்கி கிடந்த கடல்நீரில் தத்தளித்து கொண்டிருந்தன. காலை 6:00 மணிக்கு புனித நீராட வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கி இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
பின் மதியம் 12:00 மணிக்கு கடல் நீர்மட்டம் உயர்ந்ததும் அக்னி தீர்த்த கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசும் சீசனில் கடல்நீர் உள்வாங்குவதும், பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.