/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்
/
ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்
ADDED : ஆக 06, 2024 02:47 AM

ராமேஸ்வரம்:ஆடி அமாவாசையை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்துக்கு வந்தனர். தங்கள் முன்னோர் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பூஜை செய்தனர்.
பின், அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர். மேலும், கோவில் வளாகத்தின், 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர்.
அதன் பிறகு சுவாமி, அம்மன் சன்னிதிகளில் நடந்த சிறப்பு பூஜையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு கோவிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ராமர், சீதை, லட்சுமணர் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்களின் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோவில் மேற்கு வாசல் மற்றும் ரத வீதி, அக்னி தீர்த்த கடற்கரை வரை கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கோவில் வளாகத்தில் யாத்திரை பணியாளர் சங்கம் சார்பில், பக்தர்களுக்கு பால், பிஸ்கட் வழங்கப்பட்டன.