/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய்களை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
/
கண்மாய்களை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 15, 2024 03:58 AM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் பருவமழையை சமாளிக்க அனைத்து நீர்நிலைகளிலும் புதிய கட்டமைப்புகளும், விவசாயத்தை பாதுகாக்க தொழில் நுட்பங்களையும் மேம்படுத்த வேண்டியது அவசியம் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருவாடானை தாலுகாவில் 89 பொதுப்பணித்துறை கண்மாய்களும், 250 ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கண்மாய்களும், 500க்கும் மேற்பட்ட ஊருணிகளும் உள்ளன. இந்த தாலுகாவில் ஆண்டு தோறும் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது.
தாலுகாவை பொறுத்தவரை ஆண்டு தோறும் மழை பொழிவு குறைவாகத் தான் இருக்கும். கடந்த ஆண்டு காலநிலை மாற்றத்தால் பருவமழை அதிகமாக பெய்ததால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியது. இனி வரும் காலங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அப்படி மழை பெய்யும் பட்சத்தில் கண்மாய்கள் உடையும் அபாயம் ஏற்படும். ஆகவே இனி வரும் காலங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகளில் கட்டமைப்புகளை பராமரிப்பு செய்ய வேண்டும்.
திருவாடானை விவசாயிகள் கூறியதாவது: அந்த காலத்தில் கிராமங்களில் உள்ள ஆறுகள், கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள், தெப்பக்குளங்கள் ஆகியவற்றிற்கு நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு நீர் நிலையும் நிறைந்து மற்றவைகளுக்கு செல்லும் வகையில் கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
உபரி நீர் கடலுக்கும் செல்லும் வகையில் கட்டமைப்பு இருந்தது. கோடை காலங்களில் இவற்றை முறையாக துார்வாரி கால்வாய்களை பராமரித்து வந்தததால் பலத்த மழை பெய்தால் கூட சமாளிக்கும் வகையில் இருந்தது. ஆனால் இன்று நீர் நிலைகளை பராமரிக்க தவறியதால் கால்வாய், கண்மாய், ஊருணிகள் அருகில் ஆக்கிரமிப்புகள் அதிகமானதால் மழை நீரை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பருவ நிலை மாற்றங்களுக்கு தகுந்தவாறு அரசு விழிப்புடன் நீர் நிலைகளை புதுப்பிக்க வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர்.