ADDED : ஜூலை 10, 2026 03:50 PM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 110 பள்ளிகளில் படிக்கும் 5105 மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவாடானை தாலுகாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி நடந்தது. இது குறித்து திருவாடானை வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி கூறியதாவது:
திருவாடானை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 110 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய சீருடைகள், விலையில்லா புத்தக பைகள், காலணிகள் மற்றும் ஷூக்கள், காலுறைகள் எழுது பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 5105 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதால் பெற்றோருக்கு பொருளாதாரம் ஓரளவு குறைந்துள்ளது என்றார்.
––
