/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகை நகரில் பாதியில் வாறுகால் பணி
/
பரமக்குடி வைகை நகரில் பாதியில் வாறுகால் பணி
ADDED : பிப் 22, 2025 10:24 PM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி வைகை நகரில் வாறுகால் முறையாக கட்டப்படாமல் கழிவுநீர் ரோடுகளில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
பரமக்குடி நகராட்சியில் மஞ்சள்பட்டணம், புதுநகர், வைகை நகர் ஆகிய மூன்று பகுதிகள் ஒரே வார்டாக இருந்தது. கடந்த நகராட்சி தேர்தலில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு மக்கள் தொகை அடிப்படையில் வைகை நகர் 3வது வார்டாக இருக்கிறது.
இங்கு 10க்கும் மேற்பட்ட தெருக்கள், பல நுாறு வீடுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதி வைகை ஆற்றையொட்டி இருக்கிறது. 10 அடிவரை மேடான பகுதியாக உள்ள இளையான்குடி ரோடு மறுபுறம் செல்கிறது.
இங்கு ஒவ்வொரு தெருவிலும் ரோடுகள் அமைக்கப்பட்ட நிலையில் வாறுகால் அமைப்பது சவாலாக இருக்கிறது.
நகராட்சி மூலம் வாறுகால் பணிக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யும் நிலையில் கட்டுமானத்தின் போது முறையாக வடிவமைக்கப்படாமல் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பள்ளம், மேடான பகுதிகளில் நீரோட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாறுகால் அமைக்க வேண்டும். தெருக்களில் வாறுகால் பணிகள் அரைகுறையாக உள்ளதுடன், கழிவு நீரும் ரோடுகளில் தேங்கும் நிலை அதிகரித்துள்ளது.
எனவே வைகைநகர், புதுநகர் போன்ற பகுதிகளில் வாறுகால் கட்டுவதை முறைப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.