ADDED : ஆக 17, 2024 12:14 AM

கமுதி : கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் முறையான பராமரிப்பின்றி சுகாதார வளாகம் காட்சிப்பொருளாக உள்ளது.
கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டுக்கு உட்பட்ட காமாட்சி செட்டியார் தெரு, சுப்பையா தேவர் காலனி, பஜனை மட தெருக்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சி செட்டியார் தெருவில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.
அவ்வப்போது பேரூராட்சி சார்பில் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகம் பயனற்ற நிலையில் உள்ளது. இங்குள்ள சுகாதார வளாகத்தை இப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு புதர்மண்டி பயனற்ற நிலையில் உள்ளது.
இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. பயன்பாடின்றி உள்ள சுகாதார வளாகத்தை மராமத்து செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

