வழுதுார் ஒப்பந்த பணியாளர்களைநிரந்தரமாக்குதலுக்கு வலியுறுத்தல்
வழுதுார் ஒப்பந்த பணியாளர்களைநிரந்தரமாக்குதலுக்கு வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2026 06:04 PM
ராமநாதபுரம்: வழுதுார் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்க இரு அமைச்சர்கள் உத்தரவிட்டும் தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கவில்லை என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடந்தது. இதில் 623 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக கடந்த முறை நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். தீர்வு காணாத மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, ஒரு மாதத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
*பணி நிரந்தரம்: ராமநாதபுரம் வழுதுார் எரிவாயு சுழலி மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து வி.பழனிகுமார் கூறியதாவது:
வழுதுார் எரிவாயு சுழலி மின் நிலையத்தில் 86 பேர் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டனர். அதன் பின் இரு முறை அனைவரையும் நிரந்தர தொழிலாளர்களாக மாற்றுவதாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர்கள் அறிவித்தனர். தற்போது 16 ஆண்டுகள் கடந்தும் பணி நிரந்தரம் ஆக்கவில்லை. வயது மூப்பு அடைவதற்குள் அனைவரையும் பணி நிரந்தரம் ஆக்க வேண்டும் என்றார்.
*பஸ் தாமதம்: ராமநாதபுரத்தில் இருந்து வைரவன் கோவிலுக்கு தினமும் காலை 7:30 மணிக்கு வரும் பஸ் காலை 8:00 மணிக்கு திரும்ப செல்லும். தற்போது பெரியபட்டினம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பஸ் சென்று வருவதற்கு தாமதம் ஆகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. வைரவன் கோவிலுக்கு பழைய நேரத்தில் பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மனு அளித்தனர். * குடிநீர் இல்லை: கடலாடி வட்டம் காணிக்கூர் அருகே ஒச்சதேவன்கோட்டை கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வசதி செய்து கொடுக்கவில்லை. ஒரு குடத்திற்கு ரூ.10 கொடுத்து வாங்குகின்றனர். கிராமத்திற்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் நேரடி குடிநீர் வசதி செய்து தர வேண்டும். அதே போல் கிராமத்தில் ரேஷன் கடை இல்லாததால் 3 கி.மீ., தொலைவில் உள்ள காணிக்கூர் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் கூலி வேலைக்கு செல்வோர் ஒரு நாள் வேலையை விட்டு ரேஷன் பொருள் வாங்க செல்ல வேண்டியுள்ளது. ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மனு அளித்தனர்.
*விவசாயம் பாதிப்பு: வெண்ணத்துார் அருகே உள்ள பத்தனேந்தல் கிராமத்தில் 300 ஏக்கரில் விவசாயம் செய்கின்றனர். விவசாய நிலம் அருகே உப்பளங்கள், இறால் பண்ணை உள்ளது. இதில் இருந்து வெளியேறும் உப்பு நீரால் நிலத்தடி நீர் மற்றும் நிலத்தின் தன்மை மாறுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலங்களில் செயல்படும் உப்பளங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். –––
