/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடிப்படை வசதிக்கு ஏங்கும் சாயல்குடி உறைகிணறு மக்கள் சாலை அமைத்து 24 ஆண்டுகள் ஆகிறது
/
அடிப்படை வசதிக்கு ஏங்கும் சாயல்குடி உறைகிணறு மக்கள் சாலை அமைத்து 24 ஆண்டுகள் ஆகிறது
அடிப்படை வசதிக்கு ஏங்கும் சாயல்குடி உறைகிணறு மக்கள் சாலை அமைத்து 24 ஆண்டுகள் ஆகிறது
அடிப்படை வசதிக்கு ஏங்கும் சாயல்குடி உறைகிணறு மக்கள் சாலை அமைத்து 24 ஆண்டுகள் ஆகிறது
ADDED : ஏப் 30, 2024 10:47 PM

சாயல்குடி,- பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்து உறைகிணறு புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
சாயல்குடி பேரூராட்சி கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உறைகிணறு அமைந்துள்ளது. சாயல்குடி பேரூராட்சி 15 வது வார்டில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள பத்திரகாளி அம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் தெரு, தெற்கு தெரு என ஐந்து தெருக்களும் ஐந்திற்கும் மேற்பட்ட குறுகிய சந்துக்களும் உள்ளன.
இப்பகுதியில் அடிப்படை வசதிகளின்றி ரோடுகள் சேதமடைந்து குண்டு குழியுமாக உள்ளது. கழிவுநீர் வெளியேறுவதற்கான வாறுகால் உள்ளிட்ட வசதிகள் இன்றி தொடர் புறக்கணிப்பில் உள்ளனர். உறைகிணறை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.ராஜசேகர் கூறியதாவது:
உறைகிணறு பகுதியில் பனைத் தொழிலாளர்களும், விவசாய கூலி தொழிலாளர்களும் அதிகம் வசிக்கின்றனர். இங்கு 2000ம் ஆண்டில் ரோடு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 24 ஆண்டுகளாக ரோடு அமைக்கப்படாததால் மண் மேவி உள்ளது. வெயில் அடித்தால் புழுதி, மழை பெய்தால் சகதி என்ற நிலையில் உள்ளது.
இங்குள்ள தெருக்களில் முறையாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதியாக புதிய தார் ரோடு, கழிவுநீர் வாறுகால் உள்ளிட்ட வேலை அமைத்து தருவதாக கூறுகின்றனர். ஆனால் எதுவும் செய்யவில்லை. இதுகுறித்து சாயல்குடி பேரூராட்சியில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கிராம மக்களின் நலன் கருதி குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.