/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
60 ஆண்டாக துார்வாரப்படாத கண்மாய் விவசாயிகள் கவலை
/
60 ஆண்டாக துார்வாரப்படாத கண்மாய் விவசாயிகள் கவலை
ADDED : செப் 03, 2024 05:50 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய் துார்வாரப்படாமல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வடிவேல் பட காமெடி போல் கண்மாயை கண்டுபிடித்து தருமாறு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதானதொழிலாக உள்ளது.
இப்பகுதியில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட விவசாயம் செய்கின்றனர். இப்பகுதி விவசாயத்திற்கு பயன்படும் கண்மாய் 60 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல்உள்ளது.
நாணல் செடி, சீமைக்கருவேலம் மரம் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. நீர் வரத்துக்கால்வாய் மணல் மேடாகி இருந்த இடம் தெரியாமல் அழிந்து வருகிறது. இதனால் விவசாய காலங்களில் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எந்த நிர்வாகத்தில் உள்ளது கண்மாய்
விவசாயிகள் கூறியதாவது:கணேசன், விவசாயி:கீழத்துாவல் கிராமத்தில் கண்மாய் 57 ஹெக்டேரில் அமைந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படவில்லை. 15 அடிக்கும் மேல் நாணல் செடிகள், சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. வரத்து கால்வாய்கள்அழிந்துள்ளது.
பருவமழைக் காலத்தில் பெய்யும் மழை நீரை கூட தேக்கி வைக்கமுடிவதில்லை. இதனால் தண்ணீரின்றி விவசாயம் அழிகிறது. மழை நீரை கண்மாயில் சேமிக்க துார்வாரக் கோரி கலெக்டர், தாசில்தார் உட்பட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இந்த கண்மாய் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஆவணங்களில் இல்லாததால் எந்தநிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது கூட தெரியாமல் சிரமப்பட்டுவருகின்றோம்.
தமிழக அரசு அறிவித்துள்ள படி சவடுமண் அள்ளப்பட்டு விவசாய நிலங்களை மேம்படுத்த வேண்டும். கீழத்துாவல் கண்மாயில்மண் எடுக்க அனுமதி பெற முடியாததால் இதுவரை சவுடுமண் அள்ள முடியாமல் அவதிப்படுகிறோம். கண்மாய் துார்வாரப்படாததால் மழைநீர் வீணாகிறது.
இதுகுறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்து கண்மாய் எந்த நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தெரிவித்துவிரைவில் துார்வார வேண்டும்.
பாலமுருகன், விவசாயி: கீழத்துாவல் பகுதியில் 1000 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் செய்கின்றனர். இங்குள்ள கண்மாய் துார்வாரப்படாததால் மழைநீரை தேக்க முடியவில்லை. இதனால் ஆண்டுதோறும் திறந்து விடப்படும் தண்ணீரும் கண்மாய்க்கு வருவதில்லை. சில ஆண்டுகளாக மக்களிடம் பணம் வசூலித்து அபிராமம் பரளையாறு வரத்து கால்வாயில் மட்டும் மக்களின் சொந்த நிதியில் அவ்வப்போது துார்வாரி தண்ணீர் கொண்டு வந்தாலும் கண்மாயில் தேக்க முடியவில்லை. விவசாயிகள் சில ஆண்டுகளுக்கு முன் போர்வெல் அமைத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தனர்.
காலப்போக்கில் 400 அடிக்கும் கீழ் உள்ள போர்வெல்கள் அனைத்தும் காட்சிப்பொருளாக மாறி உள்ளது. தற்போது 700 அடிக்கு மேல் போர் அமைத்தால் மட்டுமே தண்ணீர் வருகிறது. விவசாயத்தை கைவிட்டு வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குசெல்கின்றனர்.
எனவே விவசாயிகளின் நலன் கருதி கண்மாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.