ADDED : ஆக 11, 2024 06:21 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை பழனிவலசையை சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் முனியசாமி 28. தமிழர் தேசம் கட்சியின் தொழில் நுட்ப பிரிவு மாநில துணைச்செயலாளர். இவரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் வந்த மதுரை குத்துக்கல் வலசை மதன் 20, மேலவளவு வாசு 21, மற்றும் 17 வயது சிறுவனை ராமநாதபுரம் பஜார் போலீசார் சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடலாடி அருகே டி.மாரியூரை சேர்ந்த ஜெகநாதன் மகன் மாந்தோப்பு லோகேஷ் தங்களை முனியசாமியை கொலை செய்ய அனுப்பியதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் லோகேஷை தேடி வந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் கூரிசாத்த அய்யனார் கோயில் ஆர்ச் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது டூவீலரில் வந்தவரிடம் இருந்த இரு அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் ரெகுநாதபுரத்தில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் கிேஷார் 24, என்பது தெரிய வந்தது. விசாரணையில் தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகளை கொலை செய்ய வந்ததாக கிேஷார் தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார் லோகேஷை தேடி வருகின்றனர்.