ADDED : ஏப் 12, 2024 10:43 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் நேற்று 10 முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை என தொடர்ந்து பலமுறை மின்தடை ஏற்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பச்சலனத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். தேர்தல் முடியும் வரை மின்தடை செய்யக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் நகர், கிராமப்புறங்களில் தினமும் பலமுறை மின்தடை ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
இதனால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், மின்சாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பட்டறைகள்,ஒர்க் ஷாப், கம்ப்யூட்டர்சென்டர் உள்ளிட்ட தனியார் நிறுவனத்தினர். முதியோர், கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர்.
தற்போது மாணவர்களுக்கு தேர்வு, தேர்தல் நேரம் என்பதால் மின்தடை பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காண அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், நேற்று ராமநாதபுரம் தங்கப்பாநகரில் மின்மாற்றி எல்.டி., லயினில் உரசிய மரத்தை வெட்டும் பணி நடந்தது. இது போக ராமநாதபும் டவுன் 3ல் பீடரை சரிசெய்யும் பணியால் சில நிமிடங்கள் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. மற்றப்படி அனைத்து பகுதிகளிலும் சீரமான மின் வினியோகம் வழங்கப்படுகிறது என்றனர்.

