/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குலதெய்வ கோயில்களில் இரவு சிவராத்திரி வழிபாடு
/
குலதெய்வ கோயில்களில் இரவு சிவராத்திரி வழிபாடு
ADDED : பிப் 27, 2025 12:40 AM

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் புவனேஸ்வரி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு இரவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் கீழக்கோட்டை காலபைரவர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி பத்ரகாளியம்மன், கருப்பண சுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக குல தெய்வத்திற்கு பாத்தியப்பட்டோர் கோயில் முன்பு நீண்ட வரிசையில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு குல தெய்வ தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு இரவில் பக்தர்களின் கும்மியாட்டம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வன்மீகநாதர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் உட்பட கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜை நடந்தது. இரவு 9:00 மணிக்கு முதல் கால பூஜையும், 12:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குலதெய்வ வழிபாடும் நடந்தது.
* பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று இரவு முதல் நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர், நயினார் கோவில் நாகநாத சுவாமி, மேலப் பெருங்கரை அட்டாள சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மேலும் கிராம கோயில்கள் உட்பட அனைத்து எல்லை தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். தொடர்ந்து வீடுகளில் மக்கள் பொங்கல் வைத்து குலதெய்வத்தை வழிபட்டு கொண்டாடினர்.
*பெரியபட்டினம் அழகுநாயகி அம்மன், அழகு சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று காலை முதல் மதியம் வரை மூலவர் அழகு நாயகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் முன்புறம் உள்ள வளாகத்தில் நேற்று மாலை அக்னி வளர்க்கப்பட்டு மறுநாள் அதிகாலை அம்மன் கரகம் முன்னே செல்ல நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.