/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீர் மேலாண்மையை செயல்படுத்தும் நிமல் ராகவன் இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கு பலன்
/
நீர் மேலாண்மையை செயல்படுத்தும் நிமல் ராகவன் இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கு பலன்
நீர் மேலாண்மையை செயல்படுத்தும் நிமல் ராகவன் இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கு பலன்
நீர் மேலாண்மையை செயல்படுத்தும் நிமல் ராகவன் இளைஞர்களின் கூட்டு முயற்சிக்கு பலன்
ADDED : ஆக 25, 2024 10:41 PM

சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் மேலாண்மை பாண்டிய மன்னர்கள் முதல் சேதுபதி மன்னர்கள் வரை முறையாக பராமரிக்கப்பட்டு பெரிய பரப்பளவில் கண்மாய்கள் மூலம் நீர்வரத்து வளம் கொழிக்கும் மாவட்டமாக முன்பு விளங்கியது.
காலப்போக்கில் நீர் வழித்தடங்களில் சீமைக் கருவேல மரங்களின் தொடர் ஆக்கிரமிப்பால் துார்ந்து போய் கண்மாய் கரைகள் பலம் இழந்து எவ்வளவு மழை பெய்தாலும் அதை சேமிக்க வழியின்றி வீணாக கடலில் கலக்கும் போக்கு தொடர்ந்து நீடித்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நாடியம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நிமல் ராகவன் 35. கடந்த 2018ல் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை புரட்டிப் போட்ட கஜா புயலின் தாக்கத்தால் விவசாயிகள் மீள முடியாமல் சிரமத்தை சந்தித்தனர்.
அன்றைய காலக்கட்டத்தில் வெளிநாடு சென்று விட்டு திரும்பி வந்த நிமல் ராகவன் புயலின் கோரத்தாண்டவத்தை கண்டு வேதனை அடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்களை மீட்டெடுக்கும் முயற்சியாக 27 கிணறுகளை புனரமைத்தார்.
மெகா பவுண்டேசன்ஸ் என்ற நீர்வள பசுமை அமைப்பை நிறுவிய அதன் மூலமாக பசுமைப் புரட்சிக்கு வித்திடும் வகையில் இளைஞர்களின் கூட்டு முயற்சியுடன் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக இந்தியாவின் தண்ணீர் வீரன் என்ற விருது பெற்றுள்ளார்.
கென்யா நாட்டிற்கு சென்று அங்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் 142 குளங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்தியாவின் தண்ணீர் வீரன் விருது பெற்ற நிமல் ராகவன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆப்பநாடு இளைஞர் மற்றும் விவசாயிகள் சபை சார்பில் 2023 செப்.1ல் புதிய அமைப்பு துவக்கப்பட்டது.
அவற்றின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சங்கரத்தேவன் கால்வாய் 14 கி.மீ., ஆப்பனுார் கால்வாய் 15 கி.மீ., மங்கலம் கால்வாய் 3 கி.மீ., கடலாடி கால்வாய் 10 கி.மீ., பெரியகுளம் கால்வாய் 6 கி.மீ., கருத்தறிவான் 3 கி.மீ., இடிவிலக்கி 3 கி.மீ., துார்வாரிக் கொடுத்துள்ளனர்.
ஆப்பனுாரில் தெற்கு கொட்டகை ஊருணியும், சேர்வாரன் ஊருணியும், சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மூன்று ஊருணிகளும் இடிவிலக்கி ஊராட்சியில் ஒரு ஊருணியும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம். இலந்தைகுலம் கிராமம் மற்றும் கடலாடி கடையக்குளம் கிராமத்திற்கு போர்வெல் அமைத்து அவற்றின் மூலம் தங்கு தடை இன்றி தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
சாயல்குடி நகர் பகுதியில் டிச., மாதம் வாக்கில் பெய்த கடும் மழையால் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள கண்மாய்கள் உடைந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக 500 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
சொந்த செலவில் நாராயண கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு இளைஞர்கள் மூலம் சரி செய்யப்பட்டது.
மழைக்காலத்தில் 20,500 மரக்கன்றுகள் கடலாடி, கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட தாலுகா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒருபோகம் விவசாயமாக இருந்த இடத்தில் தன்னார்வலர்கள் அமைத்துக் கொடுத்த கால்வாயின் மூலமாக இரண்டு போக நெல் விவசாயம் சாத்தியமாகி உள்ளது.
இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆப்பநாடு இளைஞர் மற்றும் விவசாயிகள் சபை சார்பில் பல்வேறு முயற்சிகளை இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ராமநாதபுரம் வறட்சி மாவட்டம் அல்ல. தண்ணீர் சேமிக்காத மாவட்டமாக உள்ளது. நீர் மேலாண்மையின் மூலமாக அவற்றை மாற்றிக்காட்டும் முயற்சியில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
இதற்காக கிராம மக்கள் மூலம் கிடைக்கும் நன்கொடைகளை ஒருங்கிணைத்து நீர் வழித்தடங்களை மீட்டெடுக்கவும், சீமை கருவேல மரங்களை அழித்து, தோண்டக்கூடிய இயந்திரங்களுக்கு மற்றும் மராமத்து பணிகளுக்கு பயன்படுத்துகிறோம் என்றார்.

