/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்திய ரூ.2.50 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் ஒருவர் கைது
/
இலங்கைக்கு கடத்திய ரூ.2.50 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் ஒருவர் கைது
இலங்கைக்கு கடத்திய ரூ.2.50 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் ஒருவர் கைது
இலங்கைக்கு கடத்திய ரூ.2.50 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் ஒருவர் கைது
ADDED : மே 05, 2024 12:24 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம்கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.50 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
பெரியபட்டினம் கடல் வழியாக இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்.ஐ.,அந்தோணி சகாய சேவியருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தாதனேந்தல் பஸ் ஸ்டாப்பில் நேற்று முன் தினம் இரவு 11:30 மணிக்கு வாகனங்களை சோதனையிட்டனர். அப்போது பெரியபட்டினம் கடற்கரைக்கு மினி சரக்கு வாகனத்தில் சென்ற பஞ்சந்தாங்கி முனிசாமி மகன் முத்துப்புல்லாணி 27, மொந்திவலசை நடராஜன் மகன் சீனி 25, ஆகியோரை மறித்து சோதனையிட முயன்றனர்.
திடீரென எஸ்.ஐ., அந்தோணி சகாய சேவியரின் டூவீலர் சாவியை எடுத்துக்கொண்டு முத்துப்புல்லாணி காட்டுக்குள் தப்பி ஓடினார்.
போலீசார் முத்துப்புல்லாணியை துரத்திய போது சீனி சரக்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பினார்.
அதன் பின் முத்துப்புல்லாணியும், சீனியும் ஓரிடத்தில் சந்தித்து போதை மாத்திரைகளை கடத்திச் சென்றனர். சம்பவம் குறித்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுத்துறையினர் திருப்புல்லாணி போலீஸ் எஸ்.ஐ., சிவசாமிக்கு தெரிவித்தனர். அவர் போலீசாருடன் சரக்கு வாகனத்தை தேடினார். இதனிடையே டூவீலரில் தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு ஏ.சி., மெக்கானிக் படிக்கும் மாணவர் நம்பியான்வலசை செல்வம் மகன் ஸ்ரீதர் 20, அந்த வழியாக வந்தார்.
அவரை நிறுத்திய முத்துப்புல்லாணி தான் அவசரமாக வெளியே செல்வதாகவும் சரக்கு வேனை பெரியபட்டினம் கடற்கரையில் விட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
தெரிந்தவர் என்பதால் ஸ்ரீதரும் தனது டூவீலரை கொடுத்துவிட்டு, சீனியுடன் மினி சரக்கு வாகனத்தில் சென்றார். அப்போது திருப்புல்லாணி எஸ்.ஐ.,சிவசாமி உத்தரகோசமங்கை ரோடு ஆணைகுடி பகுதியில் வாகனத்தை மறித்தார்.
உடனே சீனி கீழே குதித்து தப்பியோடினார். ஸ்ரீதரை கைது செய்து வேனை சோதனையிட்டனர். அதில் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் ப்ரீகபலின் மாத்திரைகள் 11 லட்சத்து 88 ஆயிரம் இருந்தன. அவற்றை 18 பெரிய பெட்டிகள்,5 சிறிய பெட்டிகளில் வைத்திருந்தனர். இதன் மதிப்பு ரூ.2.50 கோடி.
இந்த வலி நிவாரணி மாத்திரைகளை பெங்களூருவில் இருந்து மொத்தமாக வாங்கி ராமநாதபுரத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து சரக்கு வாகனத்தில் பெரியபட்டிணம்கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சித்துள்ளனர். இலங்கையில் இதன் மதிப்பு ரூ.10 கோடி, என போலீசார் தெரிவித்தனர்.
இவை ராமநாதபுரம் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. சீனி, முத்துப்புல்லாணியை போலீசார் தேடுகின்றனர்.