/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் பாலம் அக்டோபரில் திறப்பு
/
பாம்பன் புதிய ரயில் பாலம் அக்டோபரில் திறப்பு
ADDED : செப் 14, 2024 06:42 AM

ராமேஸ்வரம் : பாம்பன் புதிய ரயில் பாலம் அக்டோபரில் திறக்கப்பட்டு ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
மதுரையில் இருந்து சிறப்பு ரயில் ஆய்வு பெட்டியுடன் புறப்பட்ட மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா நேற்று மதியம் பாம்பன் ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் செய்து துாக்கு பாலம் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கு ரூ.90 கோடியில் கட்டப்படும் புதிய ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப் பணியை பார்வையிட்டார்.
முன்னதாக சரத் ஸ்ரீவஸ்தவா நிருபர்களிடம் கூறியதாவது: பாம்பன் புதிய பாலம் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் தற்போது துாக்கு பாலம் பொருத்தும் பணி நடக்கிறது. பணி முடிந்ததும் அக்., இறுதிக்குள் பாம்பன் பாலம் திறக்கப்பட்டு ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்கும்.
ராமேஸ்வரத்தில் பயணிகள் வசதிக்காக கழிப்பறை, ஓய்வறை, சுகாதார வசதி, பிளாட்பாரம் கட்டுமானம் உள்ளிட்ட வசதிகளை விரைந்து செய்திட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது குறித்து உயர்மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது ஆர்.வி.என்.எல்., தலைமை திட்ட மேலாளர் பத்மநாபன், தெற்கு ரயில்வே ஆலோசனை கமிட்டி உறுப்பினர் ராமநாதன், ரயில்வே பொறியாளர்கள் இருந்தனர்.