/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி எல்லை இரண்டாம் நாளாக அளவீடு
/
ஊராட்சி எல்லை இரண்டாம் நாளாக அளவீடு
ADDED : மே 15, 2024 06:36 AM
திருவாடானை : தொண்டி அருகே முள்ளிமுனை, காரங்காடு ஊராட்சி எல்லையை டி.ஜி.பி.எஸ்., கருவி மூலம் அளவீடு செய்யும் பணிகள் 2 ம் நாளாக நடக்கிறது. இரு ஊராட்சிகளையும் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தொண்டி அருகே உள்ளது முள்ளிமுனை, காரங்காடு ஊராட்சிகள். மீனவ கிராமங்களான இந்த இரு ஊராட்சிகளிடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை உள்ளது. இரு ஊராட்சியை சேர்ந்தவர்களும் தகராறில் ஈடுபடுவதும், அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்வதுமாக இருந்தனர்.
இந்நிலையில் நில அளவீடு பணிகளை மிக துல்லியமாக நிலத்தின் இருப்பிடத்தையும், எல்லைகளையும் பதிவு செய்யும் டி.ஜி.பி.எஸ்., கருவி மூலம் அளவீடு செய்யும் வகையில் நேற்று முன்தினம் பணிகள் துவங்கியது. திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் முன்னிலையில் நில அளவையர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மாலை 4:00 மணியாகியும் எல்லை கற்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நேற்று இரண்டாம் நாளாக அளவீடு பணிகள் நடந்தது. இதில் ஒரு பகுதியில் எல்லை கண்டு பிடிக்கபட்டது. தொடர்ந்து இன்று (மே 15) அளவீடு பணிகள் நடைபெறும்.
எல்லை பிரச்னையால் இரு கிராமங்களையும் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

