/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஸ்டேஷனில் அரை மணி நேரம் நிறுத்தப்படும் பயணிகள் ரயில்கள் : பயணிகள் அவதி
/
ஸ்டேஷனில் அரை மணி நேரம் நிறுத்தப்படும் பயணிகள் ரயில்கள் : பயணிகள் அவதி
ஸ்டேஷனில் அரை மணி நேரம் நிறுத்தப்படும் பயணிகள் ரயில்கள் : பயணிகள் அவதி
ஸ்டேஷனில் அரை மணி நேரம் நிறுத்தப்படும் பயணிகள் ரயில்கள் : பயணிகள் அவதி
ADDED : ஜூலை 25, 2024 04:19 AM

பரமக்குடி,: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முதல் மதுரை பயணிகள் ரயில்கள் பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் அரை மணி நேரம் வரை காத்திருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பரமக்குடியில் இருந்து இரு மார்க்கத்திலும் 300 முதல் 350 சீசன் டிக்கெட்தாரர்கள் உட்பட 1000 பேர் வரை பாசஞ்சர் ரயில்களில் பயணிக்கின்றனர். இவர்களில் அரசு, தனியார் துறையில் பணிக்கு செல்வோர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.
மேலும் முதியோர், குழந்தைகளை அழைத்துச் செல்லும் அனைத்து பயணிகளும், ரயில்களில் குறைந்த கட்டணம் மற்றும் சொகுசு பயணத்தை விரும்பி செல்கின்றனர். ஆனால் இரு மார்க்கத்தில் அவ்வப்போது அனைத்து பாசஞ்சர் ரயில்களும் 10 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை ஆங்காங்கே நிறுத்தி செல்லும் நிலை உள்ளது.
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாமலும், மறு மார்க்கத்தில் மதுரையிலிருந்து இணைப்பு ரயிலுக்கு செல்வோர் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் நிறுத்தப்படும் ஸ்டேஷன்களில் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, மதுரை- மண்டபம் ரயில் மார்க்கத்தில் 90 கி.மீ., ல் இயங்கிய ரயில்களின் வேகம் தற்போது 110 கி.மீ., வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டவாளங்களுக்கு வெல்டிங் வைப்பது, ஜல்லி கற்களை இறுகச்செய்வது என பராமரிப்பு பணி நடக்கிறது.
இதனால் தினமும் ஒரு கி.மீ., பணி செய்வதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதன் காரணமாகவே திருச்சி ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே வரும் நாட்களில் ரயில் பயணம் பயணிகளுக்கு எளிதாகும் என்றார்.

